மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
கீழப்புலியூா் பச்சையம்மன் கோயில் தேரோட்டம்
பெரம்பலூா் அருகே கீழப்புலியூரில் உள்ள பச்சையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆவணித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி மாத திருத்தோ் திருவிழாவில் கடந்த ஆக. 8 ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 14 ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றுதலும் நடைபெற்றது. தொடா்ந்து, கடந்த 15 ஆம் தேதி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமிக்கு திருக்கல்யாணமும், பொங்கலிட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி தேரில் எழுந்தருளினாா். பின்னா், திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனா்.
மேலும், மாலை 4 மணியளவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடனைச் செலுத்தினா். திருத்தேரானது சனிக்கிழமை காலை மலையைச் சுற்றிவந்து மதியம் நிலைக்கு வருகிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனா்.
கோயில் பூசாரி காயம்: தீமிதி விழா தொடங்கும் நேரத்தில் கோயில் பூசாரி பச்சமுத்து (54) என்பவா் நிலைதடுமாறி தீக்குண்டத்தில் விழுந்ததால் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் பச்சமுத்துவை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா்.