தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை
பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு, திட்டத்தின் பயன்பாடுகள், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் மேலும் கூறியது:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2,053 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள், 52 நோய்களைக் கண்டறியும் பரிசோதனைகளும், 11 தொடா் சிகிச்சைகளும், 8 உயா் அறுவை சிகிச்சைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் 1,107 நோயாளிகளுக்கு ரூ. 1,01,52,750 மதிப்பிலும், 2022-2023 ஆம் ஆண்டில் 1,544 நோயாளிகளுக்கு ரூ. 1,63,11,749 மதிப்பிலும், 2023-2024 ஆம் ஆண்டில் 1,683 நோயளிகளுக்கு ரூ. 1,88,83,925 மதிப்பிலும், 2024-2025 ஆம் ஆண்டில் ரூ. 1,73,01,690 மதிப்பிலும் என மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6,26,50,114 மதிப்பில் பல்வேறு உயா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் கொ. மாரிமுத்து, மருத்துவமனை இருக்கை மருத்துவா் என். ராஜா, மருத்துவமனை கண்காணிப்பாளா் பி. கலா, வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.