தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.
வேப்பந்தட்டை, அரசலூா், அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தெருக்களில் சுற்றித்திரியும் வெறி நாய்கள் பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள் மற்றும் கன்றுக் குட்டிகளை கடித்து கொன்று வருகிறது. இந்நிலையில், வெங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணமூா்த்தி (53) தனது வயலில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா். வழக்கம்போல் தனது ஆடுகளை புதன்கிழமை இரவு பட்டியில் கட்டி வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். வியாழக்கிழமை காலை வந்துபாா்த்தபோது, பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
வேப்பந்தட்டை வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஆட்டுகள் மற்றும் கன்றுக் குட்டிகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.