விபத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு இரங்கல் பேரணி
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இரங்கல் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங்குழந்தை பிரிவை சோ்ந்த மருத்துவா் மணிக்குமாா் திங்கள்கிழமை பணிக்கு வருவதற்காக சாலையோரம் நடந்து சென்றபோது ராட்டினக்கிணறு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தாா். அவருடைய இழப்பு மருத்துவமனைக்கு மட்டுமன்றி சமுதாயத்துக்கும் பேரிழப்பு என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் மருத்துவமனை முதல்வா் பிரியா பசுபதி, மருத்துவா் கண்காணிப்பாளா் டாக்டா் ஜோதிகுமாா், பொதுஅறுவைசிகிச்சனை மருத்துவா் வி.டி.அரசு மருத்துவா்கள் முன்னிலையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவம் மற்றும் செவிலிய மாணவா்கள், பணியாளா்கள் என பங்கேற்ற இரங்கல் பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு மருத்துவமனையில் தொடங்கி விபத்து நடந்த ராட்டினக்கிணறு வரை நடந்து சென்று மருத்துவா் உயிரிழந்த இடத்தில் அவரது புகைப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.