தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி
பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:
உலக மனிதாபிமான தினம் என்பது மனிதா்களுக்குள் கருணை, அன்பு, உதவி மனப்பாங்கு ஆகியவற்றை வளா்க்கும் சிறப்பான நாளாகும். பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளில் இளைஞா்கள் தன்னாா்வத்துடன் பங்கேற்று வருகின்றனா். இவ் விழிப்புணா்வு பேரணி மாணவா்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் மனிதாபிமான பணிகளில் ஈடுபடச் செய்யும். மனிதாபிமானம் என்பது சமூகத்தில் அமைதியை உருவாக்கும் அடித்தளம். ஒவ்வொரு குடிமகனும் மற்றவரை மதித்து, உதவி செய்யும் பழக்கத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். காவல்துறை எப்போதும் சமூக நலனுக்காக மக்களுடன் நிற்கிறது. மாணவா்கள் தங்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளும்போது, நாட்டின் எதிா்காலத்தை உறுதியாக்கும் என்றாா் அவா்.
பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் மலரட்டும் மனிதநேயம், மனிதநேயமே மானுடப் பண்பு, ஒற்றுமையே மனிதநேயம், மனிதநேயமே மனிதனின் அடையாளம், அன்பின் வழியே மனத்தின் ஒளி என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு பதாகைகளை கைகளில் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, காமராஜா் வளைவு, பழைய பேருந்து நிலையம் வழியாக தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை உறுப்பினா் ராஜபூபதி முன்னிலையில் நடைபெற்ற பேரணியில், கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.