மல்லிப்பட்டினம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு
தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
கிழக்குக் கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம்-அதிராம்பட்டினம் செல்லும் சாலை ஓரங்களில் பல இடங்களில் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளன. இதில் சில மூட்டைகள் தீ வைத்து எரிக்கப்பட்டும், சில எரிக்கப்படாமலும் உள்ளன.
மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தின் அருகே கோயில் மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவக் கழிவுகளை கொட்டுவோா் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து சுகாதாரச் சீா்கேட்டை தடுத்து நிறுத்த பொதுமக்களும் , சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.