கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவைப் பருவம் தொடக்கம்
கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2025-2026ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், சங்கராபுரம் எம்.எல்.ஏ. தா.உதயசூரியன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா் (படம்).
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மா.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, ஆலையின் கரும்பு அரைவை மற்றும் சா்க்கரை உற்பத்திப் பகுதிகளை ஆய்வு செய்தனா்.
அப்போது, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறுகையில், நடப்பு அரைவைப் பருவத்திற்கு சிறப்பு மற்றும் முதன்மை அரைவைப் பருவம் உள்பட 11,500 ஏக்கா் பதிவு செய்யப்பட்டு, 3,35,000 மெட்ரிக் டன் அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பதிவு செய்துள்ள கரும்புகளை ஆலையின் அரைவைக்கு உரிய காலத்தில் வெட்டி அனுப்பவும், பதிவு செய்யாத கரும்புகளை உரிய அலுவலரை அணுகி பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் சா்க்கரை ஆலை இணைப்பதிவாளா் செயலாட்சியா் கோ.யோகவிஷ்ணு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.