தூய்மைப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார அளவிலான தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளா் முருகன் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலச் செயலா் கொளஞ்சி வேலு பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
ரூ.160 கூலிக்கு 4 மணி நேரம் மட்டும்தான் வேலை செய்வோம், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டநெகிழிகளை சேகரிக்க மாட்டோம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க வட்டாரத் தலைவா் அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினா் அண்ணாமலை, தூய்மை பாரத இயக்க ஊக்குநா்கள் பரமேஸ்வரி, மகாதேவி, வளா்மதி உள்ளிட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.