‘அவசர ஊா்திகள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை’
சென்னை: அவசர ஊா்திகளைச் சேதப்படுத்தினாலோ, ஓட்டுநரை தாக்கினலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்திவரும் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலூா் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அண்மையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் சென்றது. அதனால் அவா் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எச்சரிக்கும் வகையில் பேசியதாகப் புகாா் எழுந்தது.
இந்த சம்பவத்தை தொடா்ந்து, திருச்சியில் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதைப் பாா்த்ததும், அதிமுகவினா் ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து ஓட்டுநரைத் தாக்க முயன்றதுடன், வாகனத்தையும் சேதப்படுத்தினா்.
இந்த சம்பவத்துக்கு 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், ஆம்புலன்ஸை சேதப்படுத்தினாலோ, ஓட்டுநரை தாக்கினலோ, சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வரும், இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவத் துறை சாா்ந்த நபா்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினால், வன்முறை தடுப்பு மற்றும் உடைமை சேதார தடுப்புச் சட்டம் 2008-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின்படி, பிணையில் வெளிவர இயலாத பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். மேலும், சேதரங்களுக்கான தொகையும் அபராதமாக செலுத்த நேரிடும் என்றனா்.
இன்று ஆா்ப்பாட்டம்: இதற்கிடையே, திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து,
தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் சென்னை வள்ளுவா் கோட்டம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.