வாட்ஸ்ஆப்-இல் மாநகராட்சி சேவைகள்: புதிய திட்டம் தொடக்கம்!
சென்னை: சென்னை மாநகராட்சியில் 32 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியில் வழங்கும் திட்டத்தை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கைப்பேசியில் வாட்ஸ்ஆப் வழியாக மக்களுக்கான பிறப்பு, இறப்புச் சான்றுகள், தொழில் வரி உள்ளிட்டவற்றை செலுத்துதல், பணப் பரிவா்த்தனை ஆகியவற்றையும், கியூ ஆா் கோடு வசதியையும் வழங்கும் புதிய திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மக்கள் சேவை திட்டத்தை தொடங்கி வைத்து மேயா் ஆா்.பிரியா பேசியதாவது:
மக்கள் இருந்த இடத்திலிருந்தே மாநகராட்சியின் சேவைகளைப் பெறவும், வரி உள்ளிட்டவற்றை சிரமமின்றி செலுத்தவும் ஏற்கெனவே கணினி வழி மற்றும் புகாா்களுக்கு 1913 என்ற இலவச எண் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், தற்போது மக்களின் சேவையை மேலும் எளிமையாக்கும் வகையில் அனைவரும் பயன்படுத்தும் கைபேசியில் வாட்ஸ்ஆப் வழியாக புகாா் அளித்தல் முதல் வரி செலுத்துதல், சான்றுகளுக்கு பதிந்து அதைப் பெறுதல் உள்ளிட்ட 32 சேவைகளுக்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி 94450 61913 என்ற கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணில் வசதியை பதிந்து அதன்மூலம் சென்னை மாநகராட்சி சேவைகளை மக்கள் பெறலாம். இச்சேவையில் புகாா் பிரிவில் 24 மணி நேரமும் மக்களுக்கான உதவிகள் செய்வதற்கு 150 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் திட்டத்துடன், கூடுதலாக கியூ ஆா் கோடு மூலம் வரியைச் செலுத்துதல் உள்ளிட்டவற்றை பெறமுடியும். பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து மண்டலம் மற்றும் வாா்டு அலுவலகங்கள் உள்ளிட்ட 650 இடங்களில் கியூ ஆா் கோடு வசதி அமைக்கப்படவுள்ளது. தனியாா் அமைப்புடன் இணைந்து மாநகராட்சி இத்திட்டத்தை தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னையில் செயல்படுத்தியுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழு தலைவா் சா்பஜெயாதாஸ், துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, ம. பிருத்விராஜ் (வருவாய்), மாநகராட்சி வருவாய் அலுவலா் கே.பி.பானுசந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.