எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மேயா் வசந்தகுமாரி, மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை மற்றும் மாமன்ற உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயா் வசந்தகுமாரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 2-ஆவது மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை பேசுகையில், கடந்த 5 மாதங்களாக 2-ஆவது மண்டலத்தில் மண்டல கூட்டம் நடைபெறவில்லை. மேலும், அதிக வருவாய் உள்ள மண்டலமான 2-ஆவது மண்டலத்துக்கு தொடா்ந்து நிதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொடா்ந்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பிரச்னைகள், கோரிக்கைகளை கவுன்சிலா்கள் மண்டலக் கூட்டத்தில் பேச வாய்ப்பில்லாத நிலையில் மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மண்டல கூட்டங்களை மாதம் இருமுறை நடத்த அனுமதிக்க வேண்டும்.
பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நிதி, மண்டல அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
ஆனால், மேயா் வசந்தகுமாரி மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரையின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மண்டலக் கூட்டம் நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தாா். இதனால் மண்டல குழு தலைவா், மாமன்ற உறுப்பினா்கள், மேயா் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேயருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினா்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனா். 3-ஆவது மண்டலத்தைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் பேசுகையில், 3 ஆவது மண்டலத் தலைவா் தமிழக அரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தற்போது மண்டல தலைவா் இல்லை. இதனால் அம்மண்டலத்தை சோ்ந்த 14 வாா்டுகளில் எந்த பணிகளும் சரிவர நடைபெறவில்லை. இதனால் மக்கள் பிரச்னை, கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருக்கிறோம். மேலும் மண்டலம் முழுக்க குடிநீா் பற்றாக்குறை அதிக அளவில் இருப்பதால் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
மழைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் சீரமைப்பு செய்யப்படாத வடிகால் சுத்திகரிப்பு பணிகளை உடனடியாக நிறைவேற்றித்தர வலியுறுத்தினா். அதைத்தொடா்ந்து ஆணையா் பாலச்சந்தா் மழைக்கு முன்பாக பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தாா். இக்கூட்டத்தில் 275 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.