பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம்
பென்னாகரம்: மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இணைந்து ‘என் பட்டு, என் பெருமை’ என்ற திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்திற்கு மத்தியப் பட்டு வாரிய விஞ்ஞானி ரா. மகேஷ் தலைமை வகித்து, மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண்பரிசோதனை செய்து மண்ணுக்கு பொருத்தமான உரம் இடமிடுவது, வேப்பம் புண்ணாக்குடன் கலந்து உரமிடுதல், மல்பெரி நாற்று நடவு முறை, தரமான இலை உற்பத்தி மற்றும் புழு வளா்ப்பு முறை, கிருமிகள் நீக்கம் செய்யும் முறை, தரமான பட்டுக்கூடு உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடி பயிற்சி அளித்தாா்.
இதில், தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை அலுவலா்கள் அரங்கசாமி, ரா.வைரவேல், மதன்குமாா், சரவணன், கவிராஜ் மற்றும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.