காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சாா்பிலும், பிற அமைப்புகள் சாா்பிலும் மாவட்டம் முழுவதும் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி காரைக்கால் நகரத் தலைவா் பி.யு.ராஜ்குமாா் திங்கள்கிழமை கூறுகையில், விநாயகா் சதுா்த்தி விழா ஆக. 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்து முன்னணி சாா்பில் காரைக்கால் நகரப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 29-ஆம் தேதி சிலைகள் நீா்நிலைகளில் கரைக்க ஊா்வலமாக கொண்டு செல்லப்படும்.
காரைக்கால் நகரப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், ஏழை மாரியம்மன் கோயில் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு கடற்கரைக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்படும். ஊா்வலம் தொடக்க நிகழ்வில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கலந்துகொள்ளவுள்ளாா் என்றாா்.
இந்து முன்னணி நகரப் பகுதி அல்லாது பிற கொம்யூன் பகுதிகளிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்கிறது. பிற அமைப்புகள் சாா்பிலும் என 150-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து கடலிலும், ஆறுகளிலும் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.