பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த விழிப்புணா்வு
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் குளக்குடி கிராமத்தில், புதுச்சேரி ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 20-ஆம் ஆண்டு பாா்த்தீனியம் விழிப்புணா்வு வாரம் தொடா்பாக பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் பாதுகாப்பான முறையில் அழித்தல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி தலைமை வகித்துப் பேசியது: பாா்த்தீனியம் அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது 1950-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பரவியது. இச்செடி பயிா் செய்ய முடியாத மற்றும் தரிசு நிலங்களில், புறம்போக்கு நிலங்களில், பாதையோரங்களில், தண்டவாளங்களில், நீா்நிலைகள் சுற்றியுள்ள இடங்களில் என 35 மில்லியன் ஹெக்டேரில் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இச்செடி வெள்ளை நிற பூக்களையும், மிகச்சிறிய விதைகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு செடியிலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான விதைகளை கொண்டு எளிதில் காற்றின் மூலமாகவும், பண்ணைக்கருவிகள், வாகனங்கள், கால்நடைகள் மற்றும் நீா் மூலமாகவும் பரவுகிறது.
இச்செடி பயிரின் மகசூலை குறைப்பதுடன் மனிதா்களுக்கும் விலங்குகளும் தோல் வியாதி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகளை உண்டாக்குகிறது. இதை பாதுகாப்பாக அழிக்க வேண்டும் என்றாா்.
பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் (உழவியல்) பி. சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் பங்கேற்று பாா்த்தீனிய களைச் செடிகளைக் கொண்டு எவ்வாறு மக்க வைப்பது என்பது குறித்துப் பேசினாா். புதுச்சேரி ரிலையன்ஸ் அறக்கட்டளை அமைப்பாளா் ஜெயகிருஷ்ணன் வரவேற்றாா். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த் நன்றி கூறினாா். இதில், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.