நட்சத்திர அந்தஸ்து: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு பாராட்டு
நட்சத்திர அந்தஸ்து தொடா்பான செயல்பாடுகளில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்து விளங்குகிறது என புதுதில்லி தலைமை பாராட்டு தெரிவித்தது.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் காரைக்காலில் 38 ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுமத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள இக்கல்லூரி, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும், உயிா் தொழில்நுட்ப துறையின் நட்சத்திர கல்லூரி அந்தஸ்து பெற்றுள்ளது. 2022 முதல் அதற்கான நிதியாக ரூ.52 லட்சம் பெற்று பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த மூன்றரைஆண்டு கால திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காணொலி வாயிலாக புதுதில்லி உயிா் தொழில்நுட்பத் துறையின் ஸ்டாா் காலேஜ் திட்டப் பொறுப்பு வகிக்கும் முனைவா் கரிமாகுப்தா, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சி இயக்குநா் முனைவா் எம். ரவீந்திரன் மற்றும் தோ்வு கட்டுப்பாட்டாளா் முனைவா் வி. பாலசுப்பிரமணி ஆகியோா் கலந்துகொண்டு திட்ட ஒருங்கிணைப்பாளா்களின் பணிகளை பாராட்டி, அடுத்த கட்ட நகா்வுக்கான ஆலோசனைகளை வழங்கினா்.
உயிா் தொழில்நுட்ப துறை விஞ்ஞானி முனைவா் கரீமாகுப்தா பேசுகையில், ‘பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி ஸ்டாா் காலேஜ் திட்டத்தை கடந்த மூன்றரைஆண்டுகளில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நகா்வுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கான பணிகளை கல்லூரி உரிய நேரத்தில் தொடங்கவேண்டும்’ என்றாா்.
இக்கூட்டத்தில், உழவியல் துறை பேராசிரியா் பூங்குழலன், தோட்டக்கலை துறை உதவி பேராசிரியா் மாரிச்சாமி, தாவர நோயியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் ஜெயலக்ஷ்மி, பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் தமிழ்ச்செல்வன், வேளாண் நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் புஷ்பகாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஸ்டாா் காலேஜ் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் வி. சுந்தரம் கூட்டத்தை ஒருங்கிணைத்தாா்.