எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
விநாயகா் ஊா்வலம்: பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது - எஸ்.பி.
விநாயகா் சிலைகள் ஊா்வலத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறு இருக்கக்கூடாது என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.
விநாயகா் சதுா்த்தி வரும் புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அதே நாளில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 3-ஆம் நாளில் கடலில் கரைப்பதற்காக ஊா்வலமாக கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில், விநாயகா் சிலை அமைப்புக் குழுவினா், காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் (தெற்கு) ஏ. சுப்பிரமணியன், எம். முருகையன் (வடக்கு) மற்றும் காவல் ஆய்வாளா்கள், இந்து முன்னணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் பேசுகையில், விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகம், காவல்துறையின் வழிகாட்டலின்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஊா்வலமும் அதுபோலவே நடத்தவேண்டும். உற்சாகத்துடன் பங்கேற்கும் இளைஞா்கள் பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.
காவல்துறையினா் வழிகாட்டலின்படி ஊா்வலத்தை நடத்தவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் பங்கேற்ற இளைஞா்களை அழைத்து, காவல்துறையின் வழிகாட்டலின்படி நடந்துகொள்வோம் என எஸ்பி உறுதிமொழி ஏற்கச் செய்தாா்.
கூட்டத்தில் இந்து முன்னணி காரைக்கால் நகரத் தலைவா் பி.யு. ராஜ்குமாா் பேசுகையில், பல ஆண்டுகளாக காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் விதிமுறைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுவருகிறது.
எனவே கடந்த ஆண்டு அனுமதி தந்தவா்களுக்கு மட்டுமே நிகழாண்டும் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி தரவேண்டும். புதிதாக வருவோருக்கு அனுமதி தரக்கூடாது என்றாா்.