2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
புதுவையில் ஊழலற்ற ஆட்சி: பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம்
புதுவையில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது என்று மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், புதுவை மாநில பாஜக மேலிட பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, மாநில முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் வி.பி.ராமலிங்கம் கூறியது :
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை நியமித்த பிரதமருக்கு நன்றி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகும்போது ஒவ்வொரு தமிழருக்கும் அது பெருமையாகும். தமிழ்ப்பற்று உள்ளதாகக் கூறிக்கொள்ளும் கட்சியினா் அவரை ஆதரிக்க வேண்டும்.
புதுவையில் வரும் 2026 பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக கூட்டணியில் போட்டியிடும். இந்த கூட்டணி இருக்குமா என கேட்போருக்கு இதுதான் பதில். புதுவையில் விஜய் கட்சியால் எந்த தாக்கமும் ஏற்படாது. பாஜகவால்தான் இந்திய தேசம் உலகளவில் பெருமையுடன் உள்ளது. தீவிரவாதம் நாட்டில் ஒழிக்கப்பட்டுள்ளது. சிந்தூா் நடவடிக்கை மூலம் உலகத்துக்கு இந்தியாவின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு காட்டப்பட்டுள்ளது.
புதுவையில் 5 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சிறிய பிரச்னை என்றாலும் சிபிஐ விசாரணை செய்யப்படுகிறது. ஊழலற்ற ஆட்சி புதுவையில் நடைபெறுகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடா்பாக பிரதமரை புதுவை முதல்வா் நேரில் சந்தித்து வலியுறுத்துவாா். என். ரங்கசாமி, விஜய் கட்சியுன் கூட்டணி வைப்பாா் என்பது ஊகத்தின் அடிப்படையிலானது என்றாா்.