அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு ரத்து!
Diabetes: அடிக்கடி பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா?
பிறந்தநாள் விழா, திருமணம், அலுவலகக் கொண்டாட்டம் என கிட்டத்தட்ட எல்லா நிகழ்விலும் கேக், பிஸ்கட், சாக்லேட் போன்ற பேக்கரி ஐட்டம்ஸ் தவறாமல் இடம்பெயர்கின்றன.
அதிக சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் நிரம்பியிருப்பதால், பேக்கரி ஐட்டம்ஸை அடிக்கடி உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தி, நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்குமா என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம்.

"பேக்கரி உணவுப் பொருள்களை அடிக்கடி சாப்பிட்டால் நீரிழிவு வருமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு முன்னால், நீரிழிவு என்றால் என்ன, இன்சுலின் என்றால் என்ன என்பதை சிம்பிளாக சொல்லிவிடுகிறேன். அப்போதுதான் பேக்கரி உணவுகளை ஏன் அடிக்கடி சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு புரியும்.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று, உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் தேவையான ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவ்வாறு போதுமான அளவு குளுக்கோஸ் செல்களுக்கு கடத்தப்படாமல் இருக்கும் நிலையே நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய்.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்கு கடத்துவதற்கு இன்சுலின் தேவை. இன்சுலின் குறைந்தாலோ, அல்லது இன்சுலின் செல்களில் சென்று சேர்க்கக்கூடிய இன்சுலின் ரிசெப்டர்களின் அளவு குறைந்தாலோ, அல்லது அவை வேலை செய்யாவிட்டாலோ, நீரிழிவு ஏற்படும்.

நாம் உணவு உண்ணும்போது அதில் உள்ள மாவுச்சத்து செரிமானமடைந்து குளுக்கோஸாக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் இரத்தத்தில் கலந்து, உடலின் செல்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. இன்சுலினின் முக்கியப் பணி இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்குள் கடத்துவதுதான்.
இரத்தத்தில் இன்சுலின் அளவு குறையும்போது, செல்களுக்கு குளுக்கோஸ் கடத்தப்படாமல், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இது டைப் 1 நீரிழிவு.
சிலருக்கு இன்சுலின் சரிவர சுரந்தாலும் அல்லது அதிகமாக சுரந்தாலும், இன்சுலின் செல்களில் சென்று வேலை செய்யக்கூடிய இன்சுலின் ரிசெப்டர்கள் (Insulin receptors) சரிவர இயங்காமல் இருந்தால், ஏற்படுவது டைப் 2 நீரிழிவு.

நாம் சாதாரணமாக உட்கொள்ளும் உணவில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும். அவை செரிமானமாகி, உடலுக்கு அத்தியாவசியமான குளுக்கோஸாக குடலில் உறிஞ்சப்படுகின்றன.
நாம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது, அவை உடலுக்கு தேவையான குளுக்கோஸாக மாற சிறிது நேரம் எடுக்கின்றன.
அப்போது உடலில் நிலையான குளுக்கோஸ் உறிஞ்சப்படும்; அதற்கேற்றபடி உடலில் இன்சுலின் உற்பத்தியாகும். இவை அனைத்தும் சாதாரணமாக நம் உடலில் நடைபெறும் இயல்பான செயல்கள்.
மாறாக, நாம் பேக்கரி உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போது, அவற்றில் உள்ள டைசாக்கரைடுகள் (Disaccharides) மற்றும் மோனோசாக்கரைடுகள் (Monosaccharides) எனப்படும் சிம்பிள் சுகர் வேகமாக செரிமானமாகி, இரத்தத்தில் உடனடியாக கலந்துவிடும். இதனால் இரத்தத்தில் திடீரென குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்.
அந்த அதிகமான குளுக்கோஸை செல்களுக்குள் கடத்துவதற்கு இன்சுலின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது ஒருவேளை நடந்தால் பிரச்னையில்லை; ஆனால் தொடர்ந்து பேக்கரி உணவுகளை சாப்பிட்டால், இரத்தத்தில் திடீரென குளுக்கோஸ் அளவு அதிகரித்து, அதனால் இன்சுலின் உற்பத்தி அளவும் அதிகரிக்கும்.
உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், குளுக்கோஸ் வழக்கமான அளவு மட்டுமே செல்களுக்குள் செல்லும். இதுவே நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

தினமும் பேக்கரி உணவுகள் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்பவர்களுக்கும், உடல் உழைப்புக்கான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும், சாதாரண வளர்சிதை மாற்றம் மூலமாகவே எனர்ஜி எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் இவற்றை எதையும் செய்யாமல் இருப்பவர்களுக்கும், சில மரபுவழி காரணங்களாலும், அதிக உடல் எடை அல்லது மெட்டபாலிக் சிண்ட்ரோம் கொண்டவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இதேபோல், எண்ணெய் மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
பேக்கரி உணவுகளுக்குப் பதிலாக காய்கறிகள், பழங்கள், சாலட், ஃபைபர் பிஸ்கட்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதிக இனிப்புகளை அடிக்கடி சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது.
உட்கார்ந்த இடத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் சிஸ்டம் ஒர்க் செய்பவர்கள், பேக்கரி உணவுகளைச் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை கொடுப்பதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
ஒரு நாளில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வேகமாக நடப்பதும், உடற்பயிற்சி செய்வதும் நல்லது.
பேக்கரி உணவுகளை எப்போதாவது சாப்பிடுவது உடலுக்கு கேடு செய்யாது; நீரிழிவு நோயும் வராது,'' என்கிறார் டாக்டர் ராஜேஷ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...