நாய்கள் மீது பிரியம் கொண்டவர்கள் தெருக்களில் உள்ள நாய்களை எடுத்து வளர்க்கலாமே? #...
'கருவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.25,000' - புரோக்கரை மடக்கிப் பிடித்து சுகாதாரத்துறை; என்ன நடந்தது?
சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு சட்டவிரோதமாக பாலினத்தைக் கண்டறிய அனுப்பி வைக்கப்படுவது சுகாதாரத் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செம்பாங்குறிச்சி பகுதியில் கர்ப்பிணிகளிடம் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிக்கும் கும்பல் உள்ளதாக சேலம் மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் சவுண்டம்மாள், யோகனாந்த் மற்றும் சுகாதார மருத்துவர்கள் குழுவினர் நேற்று சின்னசேலம் செம்பாங்குறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருவின் பாலினத்தைத் தெரிவித்தது கண்டறியப்பட்டது.
இங்கு சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து வந்த 8 கர்ப்பிணிகளுக்குக் கருவின் பாலினத்தைக் கண்டறிய தலா ரூ.25,000 வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. அந்த வீட்டிலிருந்த ஸ்கேன் மிஷன், பணத்தைப் பறிமுதல் செய்த சுகாதாரத்துறையினர், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்த கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (36) மற்றும் புரோக்கர் ஆகியோரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
இதுபற்றி தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் 2 பேரையும் சுகாதாரத்துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கர்ப்பிணிகளை இங்கு அனுப்பிய புரோக்கர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த புரோக்கர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களின் விவரங்களையும் சுகாதாரத் துறையினர் சேகரித்து விசாரித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.