குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி
`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2014-ம் ஆண்டு 5 மாணவிகள் மூணாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் மீது போலீஸார் 4 வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் தேவிகுளம் கோர்ட்டில் நடந்துவந்தன. அதில், 2 வழக்குகளில் பேராசிரியரை கோர்ட் விடுவித்திருந்தது. மீதமுள்ள 2 வழக்குகளிலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது கோர்ட். அதேசமயம் பேராசிரியர் மேல்முறையீடு செய்ததை அடுத்து சிறைத்தண்டனை நிறைவேற்றப்படாமல் வழக்கு தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

இறுதியாக தொடுபுழா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் பேராசிரியரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற எம்.ஏ இரண்டாம் செமஸ்டர் தேர்வின்போது தேர்வு எழுதும் அறையில் 5 மாணவிகள் காப்பியடித்து தேர்வு எழுதியதை கண்டுபிடித்ததால் பேராசியர் ஆனந்த் விஸ்வநாதன் மீது பொய்யாக பாலியல் தொல்லை புகார் அளிக்கப்படிருப்பது தெளிவாகியுள்ளதாகவும் கோர்ட் தெரிவித்தது. பேராசிரியரை சிக்க வைப்பதற்காக கல்லூரி பிரின்ஸ்பல் உள்ளிட்டோர் துணை நின்றதாகவும் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் காப்பியடித்ததை கண்டுபிடித்த பேராசிரியர் மீது மாணவிகள் பொய் புகார் அளித்தது தெரியவந்தது. பேராசியர் ஆனந்த் விஸ்வநாதன் 11 ஆண்டுகள் மன உளைச்சலுடன் சட்டபோராட்டம் நடத்தி இறுதியாக வெற்றிபெற்றுள்ளார். சி.பி.எம் அமைப்பு வலுவாக இருந்த அந்த கல்லூரியில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த ஒரே பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் என்பதால் அவரை பழிவாங்கும் நோக்கில் மாணவிகளை சிலர் தூண்டிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் கூறுகையில், "2.9.2014 அன்று நடந்த தேர்வின்போது கடைசி நிமிடத்தில் எக்ஸாம் ஹாலுக்குள் சென்றபோது 5 மாணவிகள் காப்பியடித்ததை கண்டுபிடித்தேன். காப்பியடித்த மாணவிகள் குறித்து உடனே கல்லூரி முதல்வர் உள்ளிட்டோருக்கு ரிப்போர்ட் செய்தேன். கல்லூரி நிர்வாகம் அதை பல்கலை கழகத்துக்கு அனுப்பவில்லை என எனக்கு பின்னர் தெரியவந்தது. அதே மாதம் 14-ம் தேதி என் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததாக எனக்கு தெரியவந்தது. அந்த புகார் மூணாறு சி.பி.எம் அலுவலகத்தில் வைத்து எழுதப்பட்டதாக மாணவிகளே வாக்குமூலத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கின் ஆதி முதல், அந்தம் வரை முடிவுகளை எடுத்தது சி.பி.எம் கட்சிதான். எஸ்.எஃப்.ஐ அமைப்பு போன்றவை சேர்ந்து உருவாக்கிய நாடகம் இது. அனைவரும் திட்டமிட்டு எனக்கு எதிராக பாலியல் தொல்லை வழக்கை பதியவைத்தனர்" என்றார்.