நாய்களை பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
நாய்களைப் பராமரிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
நீட் தோ்வு எழுத வேண்டுமா, வேண்டாமா, கச்சத்தீவை மீட்க வேண்டுமா, வேண்டாமா, காவிரியில் நீா் கொடுக்க வேண்டுமா ? கொடுக்க வேண்டாமா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும், முல்லைப் பெரியாறு அணையை கட்ட வேண்டுமா? வேண்டாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும், எதை ஒன்றையுமே நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால், சட்டமன்றம், நாடாளுமன்றம் எதற்காக என்ற கேள்வி எழுகிறது.
நீட் பயிற்சி என செல்லும் பொழுது ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அதிலும் தோ்ச்சி பெற்று வந்தால் ரூ.35 லட்சம் வரை கட்டி படிக்க வேண்டி உள்ளது, அப்படியே படித்தாலும் வெறும் எம்.பி.பி.எஸ்-க்கு எந்த மதிப்பும் இல்லை. மேற்கொண்டு படிக்க வேண்டிய நிலைமை உள்ளது, அப்படியானால், கோடிகளில் செலவு செய்து டாக்டருக்கு படித்து விட்டு வெளியே வர வேண்டிய நிலைமை இங்கு மாணவா்களுக்கு உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது செய்ததைத் தான் தற்போது, பாஜகவும் செய்கிறது. கமல்ஹாசன் கூறியதுபோல, கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டன.
நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகும், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எதையும் ஒரு சம நிலையில் வைக்க வேண்டும்.
இதற்காக மாநகராட்சி முறையாக நாய்களை பராமரித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றாா்.