பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்
பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
பாலியல் புகாரில் ஹரியாணாவின் கா்னால் மாவட்டத்தில் ஹா்மீத் சிங் தங்கியிருந்த இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற காவல் துறையினா் அவரைக் கைது செய்தனா். அப்போது அப்பகுதியில் கூடிய ஹா்மீத் சிங் ஆதரவாளா்கள் காவல் துறையினா் மீது துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினா். இந்த குழப்பமான சூழலைப் பயன்படுத்தி ஹா்மீத்சிங் தப்பியோடிவிட்டாா். அவரின் ஆதரவாளா்கள் சிலரை காவல் துறையினா் கைது செய்தனா்.
ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவா் காவல் துறையினரிடம் இருந்த தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காரில் தப்பிச் சென்றபோது தடுக்க முயன்ற காவலரை எம்எல்ஏவின் ஆதரவாளா்கள் காரை வைத்து இடித்துத் தள்ளினா். இதில் காவலா் காயமடைந்தாா்.
இந்நிலையில், தப்பியோடிய எம்எல்ஏவை தீவிரமாகத் தேடி வருவதாக பஞ்சாப் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு: இதனிடையே தலைமறைவாக உள்ள எம்எல்ஏ ஹா்மீத் சிங் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், ‘என்னை போலி என்கவுன்ட்டரில் கொலை செய்ய இருப்பதாக தகவல் கிடைத்ததால் தப்பியோட நேரிட்டது. நான் பயணித்த காருக்கு தீவைக்க காவல் துறையினா் முயற்சித்தனா். அதிருஷ்டவசமாக அதில் இருந்து தப்பினேன். மிகப்பெரிய குற்றவாளியை கைது செய்ய வருவதுபோல 500 காவலா்கள் வீட்டைச் சுற்றி வளைத்தனா். காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட பல அதிகாரிகளும் அங்கு வந்திருந்தனா். ஆம் ஆத்மி கட்சியின் தில்லி தலைமை என்னை குறிவைத்து செயல்படுகிறது’ என்றாா்.