பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை
சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட்டனா். இம்மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு செப்.7-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 1,000-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் ஜெய்பூா், கோட்டா, தெளசா, சிகாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ரயில்-சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிஸாவில் தொடா் மழையால் பாலசோா், பத்ராக், கட்டாக், புவனேசுவரம், போலாங்கீா் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் அணை உடைந்து 4 போ் உயிரிழப்பு
பல்ராம்பூா்: சத்தீஸ்கரின் பல்ராம்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழையால் சிறிய அணையின் ஒரு பகுதி உடைந்ததில் அருகிலுள்ள கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது, வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் பல வீடுகள் சேதமடைந்தன; கால்நடைகள் உயிரிழந்தன. இந்த அணை 1980-களின் தொடக்கத்தில் கட்டப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.