செய்திகள் :

ஆற்காடு: `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அடித்து விரட்டப்பட்டாரா முதியவர்? நடந்தது என்ன?

post image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், `உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று (3-9-2025) நடைபெற்றது.

இந்த முகாமில், வெங்கடபதி என்கிற 65 வயது முதியவர் மனு கொடுப்பதற்காகச் சென்றார். அதாவது, ``சாத்தூரில் 335 ஏக்கர் `ரிசர்வ் ஃபாரஸ்ட்’ நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் 1983-ல், அனுபவ ரீதியாக பத்திரம், பட்டா கொடுத்துவிட்டார்கள். `அது தவறு’ என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்திருக்கிறேன். இப்போது வரை அந்தக் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த முகாமில் பட்டா வழங்கக்கூடாது’’ என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார் முதியவர் வெங்கடபதி.

ஆனால், முகாமில் முதியவரின் மனு ஏற்கப்படவில்லை. முதியவரும் தன்னுடைய மனுவை ஏற்றுக்கொண்டு `ஒப்புகைச் சீட்டு (அக்னாலேஜ்மென்ட்)’ தருமாறு கேட்டிருக்கிறார். மனுவை நிராகரிக்கும் வகையிலேயே அங்கிருந்த அலுவலர்கள் கடிந்து பேசியதால், முதியவரும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

சப்-இன்ஸ்பெக்டரால் தாக்கப்படும் முதியவர்
சப்-இன்ஸ்பெக்டரால் தாக்கப்படும் முதியவர்

சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) ஷாபுதீன், முகாமில் இருந்து முதியவரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, `நீயும் கூட்டுக்களவாணி தானா?’ என்று முதியவர் வார்த்தையை விட்டதால், ஆத்திரமடைந்த வி.ஏ.ஓ ஷாபுதீன், முதியவர் வெங்கடபதியைத் தாக்கி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், முதியவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து, அங்குப் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் என்பவர் முதியவர் வெங்கடபதியைப் பிடித்து வெளியே தள்ளியபடி வந்தார்.

அப்போது, `யோவ், என் மேல கை வைக்காத’ என்று முதியவர் சொன்னதால், உடனே கோபப்பட்ட எஸ்.ஐ பிரபாகரன் அந்த முதியவரை ஓங்கிக் குத்தி தாக்கினார். பதிலுக்கு அந்த முதியவரும் ``நீ அடிச்சா நானும் உன்ன அடிப்பேன். நான் மனு கொடுக்க வந்துருக்கேன். உனக்கு இங்கு என்ன வேலை’’ என்றார்.

``மனுவைத் தயார் பண்ணிக்கிட்டு வந்து கொடு, நடவடிக்கை எடுப்பாங்க. அமைதியா இரு’’ என்றார் எஸ்.ஐ பிரபாகரன். ``மனுவைத் தயார் பண்ணிக்கிட்டு வந்து கொடுத்துட்டு அமைதியா தான் இருக்கேன்’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார் முதியவர் வெங்கடபதி.

அப்போது பேசிய முதியவர் வெங்கடபதி, ```ரிசர்வ் ஃபாரஸ்ட்டில் பட்டா கொடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என்று கலெக்டரிடம் கேட்கிறேன். `ரிசர்வ் ஃபாரஸ்ட்டில் பட்டா வழங்க வழிவகை இல்லை’ என்று கலெக்டரும் எனக்கு லெட்டர் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, இந்த ஆற்காடு தாசில்தார் மூலமாக அந்த இடத்தில் 11 வீடுகள் கட்டப்படுகின்றன.

அரசாங்கமே இப்படித் தவறு செய்யும்போது, தனிமனித ஒழுக்கம் எங்கிருந்து இருக்கும்? இந்த முகாமில் போய் மனு கொடுத்தேன். `அக்னாலேஜ்மென்ட் தர மாட்டோம்’னு சொன்னாங்க. அதைக் கேட்கப்போய்தான் வி.ஏ.ஓ என்னை அடிச்சுட்டார். நான் கீழ விழுந்ததால எனக்கு அடிப்பட்டதாகச் சொல்வது பொய். கீழ விழல. அந்த வி.ஏ.ஓ அடிச்சதாலதான் ரத்தம் வந்துச்சு. என்னை `குண்டாஸ்’ல போடணும்னு சொல்றாங்க’’ என்றார் மிக வேதனையுடன்.

முகாமில் இருந்து விரட்டப்படும் காட்சி
முகாமில் இருந்து விரட்டப்படும் காட்சி

இதனிடையே, சப்-இன்ஸ்பெக்டரால் முதியவர் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டக் காவல்துறையும் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், ```உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கலந்துகொண்ட சாத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதி என்பவர் மனு சம்பந்தமாக வாக்குவாதம் செய்து திடீரென கிராம நிர்வாக அலுவலரைக் கையால் தாக்கியதுடன், அரசுப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்ததும் தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக, அங்குப் பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பிரச்னை மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

வெங்கடபதியை வெளியேற்றம் நோக்கில் சப்-இன்ஸ்பெக்டர் குறைந்த அளவு பலத்தைப் பயன்படுத்தி வெங்கடபதியை அமைதிப்படுத்தி அனுப்பியதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தின் முழு காணொளியிலிருந்து, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வெங்கடபதிக்கு இடையிலான நிகழ்வின் ஒரு பகுதியை மட்டுமே சமூக ஊடகங்களில் மிகைப்படுத்திப் பரப்பி வருகின்றனர்.

பொதுமக்கள் இவ்வாறு பரப்பப்படும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை நம்ப வேண்டாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, முதியவர் வெங்கடபதி மீது ஆற்காடு தாலுகா காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையில், முதியவர் மீதான தாக்குதலைக் கண்டித்திருக்கிறார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். ``உங்களுடன் ஸ்டாலின் முகாமில், தமது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து வினா எழுப்பிய முதியவர் ஒருவரை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரியும், காவல் உதவி ஆய்வாளரும் கொடூரமாக அடித்து உதைத்துத் தாக்கியுள்ளனர்.

மனிதத்தன்மையற்ற இந்தச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஆற்காடு ஒன்றியம் முத்துப்பேட்டை கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் முதியவர் வெங்கடபதி மனு அளித்திருந்தார்.

பல நாள்களாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்தான், சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்குச் சென்று, அங்கிருந்த அதிகாரிகளை அணுகி தமது மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவியுள்ளார். மேலும் தமது மனுவைப் பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும்படியும் கோரியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இதைச் சகித்துக் கொள்ள முடியாத கிராம நிர்வாக அதிகாரியும், அவருக்குத் துணையாக வந்த அதிகாரிகளும் பெரியவர் வெங்கடபதியை அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, காவல் உதவி ஆய்வாளரும் முதியவரை மார்பில் குத்தி விரட்டியடித்துள்ளார்.

இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே `அது ஊரை ஏமாற்றும் திட்டம்’ என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 35 லட்சம் பேர் மனு அளித்துள்ள நிலையில், அவர்களில் 90 விழுக்காட்டிற்கும் கூடுதலான மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அப்பட்டமான படுதோல்வி என்பதற்கு இவை தான் சான்றாகும். `மனு மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?’ என்று எவரேனும் கேட்டால், அதற்குப் பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூடச் செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் தானே தவிர, கேள்வி கேட்பவர்களை அடித்து உதைப்பதற்கான திட்டம் இல்லை என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அதிகாரத் திமிருடன் மக்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி: கொள்கை, அரசியல் வித்தியாசம் என்ன? -தவெகவுக்கு சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது வாக்குப் பதிவு நேர்மையாக தான் நடந்தது என்பதை எங்கு வந்து ... மேலும் பார்க்க

கழுகார்: கிளம்பிய இனிஷியல் தலைவர் டு 'ஐஸ்' வைக்கும் கனவுப் புள்ளி வரை!

கொதிக்கும் நலத்துறை அதிகாரிகள்!பாலுக்குக் காவலாக பூனையா?சமூகத்திற்கு நன்மை செய்ய உருவாக்கப்பட்ட துறையில், சமீபக்காலமாக மோசடி, ஊழல் புகார்கள் அதிகரித்து வருகிறதாம். அந்தத் துறையில், பணம் அதிகமாகப் புழங... மேலும் பார்க்க

Stalin: "இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்" - இபிஎஸ் தாக்கு

"டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அ... மேலும் பார்க்க

PMK: ``உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதியவரை கொடூரமாக தாக்கியது மனிதத் தன்மையற்ற செயல்'' - அன்புமணி

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தூர் கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நேற்று (3.9.2025) நடந்த `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட செய்தி வி... மேலும் பார்க்க

``ரஷ்யாவின் மீது நான் நடவடிக்கை எடுக்கவில்லையா?'' - நிருபரிடம் கொந்தளித்த ட்ரம்ப்

ரஷ்யா - உக்ரைன் போர் மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது.பிற நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை பெரும்பாலும் நிறுத்திவிட்டன. ஆனாலும், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ... மேலும் பார்க்க

டீம் சேர்க்கும் செங்கோட்டையன், நீக்கும் முடிவில் EPS? | Elangovan Explains

எடப்பாடிக்கு எதிராக டீம் சேர்க்கும் செங்கோட்டையன். அவரை நீக்கும் முடிவில் எடப்பாடி என்ன செய்கிறார்? செப் 5-ல், அதிமுகவில் பெரும் புயல் காத்திருக்கிறது என கூறப்படுகின்றது.மறுபுறம், அன்புமணியை நீக்கும் ... மேலும் பார்க்க