Stalin: "இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்" - இபிஎஸ் தாக்கு
"டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பாலியல் வன்கொடுமைகள்
மதுரை மாவட்டத்தில் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பழங்காநத்தத்தில் பேசும்போது, ‘’மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. இந்தத் தொகுதியில் வந்திருக்கும் உங்களின் எழுச்சியே அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும் என்பதற்கான சாட்சி. கடந்த தேர்தலில் மதுரை மாவட்டத்திலுள்ள சில தொகுதிகளில் திமுக சூழ்ச்சி செய்தது. ஆனால், அடுத்தாண்டு தேர்தலில் மதுரையின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும்.
கூட்டணிக் கட்சிகள் மூலம் வென்றுவிடுவோம் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். திமுக ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம் ஏராளம். அவை எல்லாமே தேர்தலில் பிரதிபலித்து படுதோல்வி அடைவார். அதிமுக தலைமையில் அமைவது வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினமும் கொலை நிலவரம்தான் செய்தியாக வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னரே போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எங்கள் கிராமத்தில் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று இன்று காலையில் சந்தித்தவர் கேட்டுக்கொண்டார்.
போதைக்கு அடிமையாகிவிட்டால் மீட்டெடுக்க முடியாது. நம் குழந்தைகள்தான் நம் செல்வங்கள், அவர்களுக்காகத்தான் கஷ்டப்படுகிறோம். நம் குழந்தைகள் நம் கண் முன்னே அழிவதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் போதை பெருகியது, நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது.

மதுரை மாநகராட்சி ஊழல்
மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். நாங்கள் சொல்லியபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம். அதைச் செய்யத் தவறிவிட்டது. இதுதான் கையாலாகாத அரசு என்பதற்கு உதாரணம்.
எல்லா துறைகளிலும் ஊழல் என்பதற்கு மதுரை மாநகராட்சியே ஒரு உதாரணம். நீங்கள் செலுத்தும் வரியெல்லாம் திமுகவினருக்குச் செல்கிறது. மதுரை மாநகராட்சியில் மேயர் 200 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக செய்தி வந்தது. இந்த அரசே விசாரித்து மண்டல குழுத் தலைவர்கள் 5 பேர், வரிக்குழு, நகரமைப்பு குழுத்தலைவர் ராஜினாமா செய்துள்ளனர். அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேயரைக் கைது செய்யவில்லை, அவரது கணவரை மட்டும் கைது செய்தனர். இதற்கு யார் பொறுப்பு? மேயரை ஏன் கைது செய்யவில்லை? அவரது கணவரையும் சாதாரண பிரிவுகளில் கைதுசெய்து திமுக அரசு நாடகம் நடத்துகிறது. அடுத்தாண்டு அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த ஊழல் முழுமையாக விசாரிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் ஒரு ரூபாய் கூட வீணாகாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசாங்கம்தான். அன்று முதல் இன்று வரை ஊழல் தொடர்கிறது. 2026 தேர்தல் ஊழல் அரசுக்கு முடிவுகட்டும் தேர்தலாக இருக்க வேண்டும்.
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி, மாதத்துக்கு 450 கோடி, வருடத்துக்கு 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
கூடுதலாகப் பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாகத் தகவல். வெட்டவெளிச்சமாக 10 ரூபாய் அதிகம் வசூலிப்பது எல்லோருக்கும் தெரியும். இதற்குப் பின்னே இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்துள்ளது.

ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்
அமலாக்கத்துறை விசாரணையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும் என்று செய்தி வந்திருக்கிறது. இந்த ஒரு துறையில் மட்டும் இவ்வளவு பணம் என்றால் மற்ற துறைகளை நினைத்துப் பாருங்கள். இவ்வளவு பணமும் எங்கே போகிறது? இப்போது ஸ்டாலின் வெளிநாடு போய்விட்டார். அவர் தொழில் முதலீட்டை ஈர்க்கப் போகவில்லை இங்குக் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யப் போயிருக்கிறார்.
ஜெர்மனில் 3200 கோடி ரூபாய் ஈர்த்ததாகச் செய்தி, ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அமைந்த தொழிற்சாலையை விரிவுபடுத்த ஜெர்மனிக்குச் சென்று ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒரே ஒரு நிறுவனத்துடன் ஆயிரம் கோடியில் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படி மக்களை ஏமாற்றி ஈர்ப்பதாகச் சொல்லிப் பொய் செய்தி வெளியிடுகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கி வருகிறது.
அந்த வழியில் 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன் மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தத் தொழிற்சாலைகள் எல்லாம் வந்தது போன்றும், வருமானம் அதிகரித்திருப்பது போன்றும் தவறான செய்தியைப் பரப்புகிறார்கள்.

திமுக ஆட்சியிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஒப்பந்தங்கள் போட்டனர், ஆனால் அவை இன்னும் நடைமுறைக்கே வரவில்லை. ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்குப் பல்வேறு முதற்கட்டப் பணிகள் நடக்கும். தொடங்குவதற்கு இரண்டு அல்லது மூன்றாண்டுகள் ஆகும்.
திமுக அரசால் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 10 சதவிகிதம் கூட நடைமுறைக்கு வரவில்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போட்ட தொழில்கள் தான் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் மூலமே வேலைவாய்ப்பு கிடைத்து பொருளாதாரம் பெருகியுள்ளது இதுதான் உண்மை" என்றார்.