நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
நைஜர் மாநில அவசர மேலாண்மை நிறுவனத்தின்படி, அவசரக்கால மீட்பு பணியாளர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த படகு விபத்து நிகழ்ந்தது. போர்கு உள்ளூர் அரசுப் பகுதியில் உள்ள கௌசாவா சமூகத்திற்கு அருகே அதிக சுமை ஏற்றப்பட்ட கப்பல் ஒரு மரத்தின் அடிப்பகுதியில் மோதி கவிழ்ந்தது.
படகில் 100-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்றதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. படகில் பயணித்தவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்ததாக ஷாகுமி மாவட்டத் தலைவர் சாது இனுவா முஹம்மது கூறினார்.
படகு விபத்துக்கள், பெரும்பாலும் அதிக சுமை, மோசமான வானிலை ஆகிய காரணங்களால் ஏற்படுவது நைஜீரியாவில் பொதுவானதாகும்.