அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு ரத்து!
Kim Jong Un: சீனாவுக்கு ரயிலில் சென்ற கிம் ஜாங் உன்; `நகரும் கோட்டை' பற்றி தெரியுமா?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவின் இரண்டாம் உலகப்போர் முடிவைக் கொண்டாடும் மாபெரும் அணிவகுப்பில் கலந்துகொள்ள நேற்று (செப்டம்பர் 3), தனது பிரத்யேக ரயிலில் மகளுடன் வந்தடைந்தார்.
ரஷ்யா, சீனா என எங்கு பயணம் மேற்கொண்டாலும் இந்த பச்சை நிற ரயிலில்தான் செல்கிறார் கிம். உள்ளூரில் சில சமயங்களில் படகில் அல்லது தனி விமானத்தில் பயணம் செய்தாலும், முக்கியமான பயணங்களுக்கு இந்த மெதுவாக நகரும் ரயிலையே நம்புகிறார்.
இதற்கு பாதுகாப்பு, சொகுசு மற்றும் பாரம்பரிய காரணங்களும் உள்ளன. இதை ‘தி சன் ட்ரெயின்’ (The Sun Train) என அழைக்கின்றனர்.

கிம் தன்னைப் பற்றிய விவரங்களும், தனது பழக்கவழக்கங்களும் வடகொரியாவைத் தாண்டி வெளியில் கசிவதை அவர் விரும்புவதில்லை.
இதற்கு பாதுகாப்பே மிக முக்கியமான காரணமாகும். எல்லா நாடுகளின் தலைவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், அமெரிக்காவுக்கு அணுகுண்டு மிரட்டல் விடுக்கும் சோசலிச நாட்டின் சர்வாதிகாரி, அதீத பாதுகாப்புடன் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அதற்காக நீண்ட நேரம் ஆனாலும், மணிக்கு 59 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயிலிலேயே கிம் பயணம் செய்கிறார். இது நகரும் கோட்டை எனலாம்.
பாரம்பரிய காரணங்கள்
கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் (Kim Jong Il) மற்றும் தாத்தா கிம் இல் (Kim Il Sung) ஆகியோர், வானில் பறப்பதை அச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள், சோதனை ஓட்டத்தின் போது தங்கள் ஜெட் வெடித்ததைக் கண்ட பின்னர், அந்த பயம் கிம் ஜாங் இலுக்கும் கிம் இல் சுங்கிற்கும் தொற்றிக்கொண்டதாக தெரிவித்திருக்கின்றன.

ஆனால், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு 1986-ஆம் ஆண்டு கிம் இல் சுங் சோவியத் யூனியனுக்கு விமானத்தில் சென்றுள்ளார்.
அதன்பிறகு, 2001-ஆம் ஆண்டு புதினைச் சந்திக்கும் வகையில் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சுமார் 19,000 கிலோமீட்டர் செல்ல கிம் ஜாங் இல் 10 நாட்களுக்கும் மேலாக ரயில் பயணம் மேற்கொண்டார்.
கிம் ஜாங் உன், சுவிட்சர்லாந்தில் தனது பள்ளி நாள்களிலேயே அடிக்கடி விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு விமான அச்சம் இல்லை. 2011-ஆம் ஆண்டு வடகொரியாவின் அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட கிம் ஜாங் உன், 2018-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சிங்கப்பூரில் சந்தித்தது உட்பட, சில சமயங்களில் விமானப் பயணத்தையும் தேர்வு செய்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு ட்ரம்ப்பை இரண்டாவது முறையாக சந்திக்கும்போது, வியட்நாமுக்கு செல்ல 3 நாட்கள் இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டார். சில சமயங்களில் தனது காரையும் ரயிலிலேயே ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

நகரும் கோட்டை?
அந்த ரயிலை அப்படி அழைக்க சில காரணங்கள் உள்ளன. முதலில், இந்த ரயிலை குண்டுகள் துளைக்க முடியாது. உள்ளே மருத்துவ ஊழியர்கள், பணிவிடை செய்பவர்கள் மட்டுமல்லாமல், சிறிய ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையும் இருக்கும். அதோடு, பெரிய அளவிலான ஆயுதங்களும் இருப்பதாக தென்கொரிய உளவாளிகள் தெரிவித்துள்ளனர்.
90 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை வெளியிலிருந்து பார்க்க முடியாது. இந்த ரயில் மெதுவாக நகர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இதன் எடையும் உள்ளது.
ரயிலுக்குள் ஆலோசனை நடத்துவதற்கான அறை, படுக்கையறை, செயற்கைக்கோள் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல், உயர் தர உணவுகளைத் தயாரிக்கும் விதமாக சமையலறையும் அமைக்கப்பட்டுள்ளது.
Kim Jong Un has arrived in China on his armored bulletproof train .
— Arpan Das | Geopolitics & Sarcasm (@arpanDvengeance) September 2, 2025
This isn’t just optics — it signals deepening Beijing–Pyongyang coordination at a time of shifting global power balances.
Every stop of that train carries weight for Washington, Seoul & Tokyo.#Geopolitics… pic.twitter.com/my2CQ4CL0b
இந்த ரயில் எவ்வளவு பாதுகாப்பானதோ, அதே அளவு சொகுசானதும்கூட. விமானத்தை விட கவச ரயில் அதிக பாதுகாப்பையும் ஆடம்பரத்தையும் வழங்குகிறது என்று கிம் ஜாங் உன் நம்புகிறார் என ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு ரஷ்யா சென்றபோது, புதின் பரிசளித்த ரஷ்யன் Aurus Senat Limousine காரையும் ரயிலில் வைத்தே கொண்டுவந்தார். தற்போது கிம் ஜாங் உன்னின் மகள் ஜூ ஏ தனது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்த ரயிலில் மேற்கொண்டுள்ளார்.
இதுதவிர, உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலும் உள்ளது. ரயில் பயணிக்கும் பாதையில் எந்த இடையூறும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இதற்கு முன்னால் ஒரு ரயிலும், பாதுகாப்புப் படையினருடன் பின்னால் இன்னொரு ரயிலும் செல்கிறது எனக் கூறப்படுகிறது.