Russia: ``ட்ரம்பின் பேச்சுவார்த்தைகள், முயற்சிகள் இதுவரை தோல்வியே'' - புதின் சொல்வதென்ன?
ரஷ்யா - உக்ரைன் இடையே பிப்ரவரி 2022 முதல் போர் நடந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன.
இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர். அதே சமயம், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்த சர்வதேச சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சில தினங்களுக்கு முன்பு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது:
"உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒருவேளை அமைதி ஒப்பந்தத்திற்குத் தயாராக இல்லையெனில், ரஷ்யா தனது இலக்குகளை ராணுவ பலம் மூலமாகவே அடைவோம்.
போரில் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதிகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்வதை பாராட்டுகிறேன்.
ஆனால், அவரின் பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகள் இதுவரை தோல்வியையே சந்தித்துள்ளன."என்றார்.

இது தொடர்பாக இங்கிலாந்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி கூறியதாவது:
"ட்ரம்ப் புதினை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்துள்ளார். இங்கிலாந்து போன்ற நாடுகள் புதினின் மீது கூடுதல் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தவும், உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளன." என்றார்.