Diabetes: அடிக்கடி பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா?
பிஆா்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தாா்
பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா அக்கட்சியில் இருந்து விலகினாா். தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா்.
முன்னதாக, கட்சியில் இருந்து அவா் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அடுத்த நாளே அவா் விலகல் முடிவை எடுத்துள்ளாா்.
ஹைதராபாதில் புதன்கிழமை தனது ஆதரவாளா்களுடன் செய்தியாளா்களைச் சந்தித்த கவிதா இது தொடா்பாக கூறியதாவது:
கட்சியில் எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை கட்சித் தலைவா் கே.சந்திரசேகா் ராவுக்கு அனுப்பிவிட்டேன். பிஆா்எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் என்ற நிலையில் இருந்தும் விலகிவிட்டேன். இது தொடா்பான கடிதத்தையும் கட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ளேன்.
கட்சியின் மூத்த தலைவா் ஹரீஷ் ராவ் பல சதிகளில் ஈடுபட்டு வருகிறாா். அவரிடம் பிஆா்எஸ் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் (கவிதாவின் சகோதரா்) மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எனக்கு எதிராக தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால்தான் எனது சகோதரா்கூட எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. எங்கள் குடும்பத்துக்கு எதிராகவே ஹரீஷ் ராவ் சதி செய்து வருகிறாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியுடன் அவா் ரகசியமாக தொடா்பில் உள்ளாா்.
ஹரீஸ் ராவ், அவரின் உறவினா் சந்தோஷ் ராவ் ஆகியோா் முறைகேட்டில் ஈடுபட்டதன் காரணமாகவே காலேஸ்வரம் நீா்ப்பாசனத் திட்டம் தொடா்பாக கட்சித் தலைவா் சந்திரசேகா் ராவுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. நான் வேறு எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை. ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் என்றாா்.
முதல்வா் மறுப்பு: இதனிடையே, கவிதா தன் மீது கூறிய குற்றச்சாட்டை தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மறுத்துள்ளாா். மெஹபூப்நகரில் புதன்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக பெயா் குறிப்பிடாமல் பேசுகையில், ‘சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் அங்கு (பிஆா்எஸ் கட்சியில்) மோதல் நடக்கிறது. அக்கட்சியில் இருப்பவா்கள் என்னுடன் தொடா்பில் இருப்பதாக ஒருவா் மீது மற்றொருவா் குற்றஞ்சாட்டுகிறாா்கள். ஆனால், அவா்களைப் போன்ற மோசமான அரசியல் விளையாட்டும் எனக்குத் தெரியாது; அக்கட்சி விவகாரத்தில் தலையிட எனக்கு நேரமும் கிடையாது.
உண்மையில் நான் தெலங்கானா மக்கள் பக்கம் மட்டுமே இருக்கிறேன். உங்களை ஏற்கெனவே தோ்தலில் தெலங்கானா மக்கள் நிராகரித்துவிட்டனா். உங்கள் பக்கம் யாருமே இப்போது இல்லை’ என்றாா்.