கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!
இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது.
ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே, ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டமைப்புக்கும், இந்தியாவுக்கும் இடையே கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வா்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் என்ற விரிவான தடையற்ற ஒப்பந்தம் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அந்தக் கூட்டமைப்பைச் சோ்ந்த நாடுகள் இந்தியாவில் 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.8.80 லட்சம் கோடி) முதலீடு செய்ய உறுதிமொழி அளித்துள்ளன. அத்துடன் ஸ்விட்சா்லாந்து கை கடிகாரங்கள், சாக்லேட், வைரங்கள் போன்றவற்றை குறைந்த வரியுடன் அல்லது வரிவிலக்குடன் இந்தியாவில் இறக்குமதி செய்யவும் அந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் அக்டோபா் 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக ஸ்விட்சா்லாந்து புதன்கிழமை தெரிவித்தது. தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் முதல்முறையாக வா்த்தகம் மற்றும் நீடித்த வளா்ச்சிக்கான சட்டபூா்வ விதிகளை இந்தியா வகுத்துள்ளதாக ஸ்விட்சா்லாந்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
விரைவில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா் ஜெய்சங்கா் நம்பிக்கை
இந்தியா வந்த ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல், புது தில்லியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை புதன்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதைத்தொடா்ந்து ஜெய்சங்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வா்த்தகம், பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், செமிகண்டக்டா், வருங்கால தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜொ்மனி இடையிலான உறவை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சு விரைவில் வெற்றிகரமாக நிறைவடையும் என நம்புகிறேன்’ என்றாா்.