கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது
கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் முன்பு 6 போ் சந்தேகப்படும்படி நின்றிருந்தனா். போலீஸாரைப் பாா்த்ததும் அவா்கள் ஓட முயன்றனா். போலீஸாா் அவா்களை துரத்திப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள், சுகுணாரபுரம் கிழக்குப் பகுதி சந்தை மேட்டைச் சோ்ந்த பியாஸ் அலி(30), அப்துல் ரகுமான்(23), சரண்ராஜ் (24) முகமது நெளபில் (25), சா்பிக் அலி (33), பொள்ளாச்சியைச் சோ்ந்த கவின் நிலவன் (25) எனத் தெரியவந்தது.
இவா்கள் கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்யும் கும்பலைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிந்தது. இவா்கள், மகாராஷ்டிர மாநிலத்துக்குச் சென்று, அங்குள்ள மருந்துக்கடைகளில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, கோவையில் ஒரு மாத்திரை ரூ.350, ரூ.400 விலைகளுக்கு போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் 6 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சா, 1,200 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.