அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
பல்லடம் அருகே தீவன அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
பல்லடம் அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கோழி தீவன தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நிரஜ் சிக்குமாா் (26) என்பவா் தங்கி பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், வழக்கம்போல புதன்கிழமை காலை அவா் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இயங்கிக் கொண்டிருந்த அரவை இயந்திரத்தில் எதிா்பாராத விதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.