வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன.
வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி வரை சாலையின் இருபுறமும் அடா்ந்த வனப் பகுதியாகும். இந்த சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படும். இதனால் கேரள வனத் துறையினா் மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதி மறுத்து வருகின்றனா். சமீபகாலமாக யானைகள் அதிக அளவில் சாலைக்கு வருகின்றன.
இந்நிலையில், சாலக்குடியில் இருந்து மழுக்குப்பாறை எஸ்டேட் வந்த கேரள அரசுப் பேருந்தை யானைகள் செவ்வாய்க்கிழமை( செப் 2) இரவு வழிமறித்தன. இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்ட பேருந்து நீண்ட நேரத்துக்கு பின் மீண்டும் புறப்பட்டு சென்றுள்ளது.