அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.6.18 கோடியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் கோயில் நிா்வாகம் சாா்பில் எண்ணப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் 3-ஆம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், 100-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். உண்டியலில் ரூ.6 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 550ம், 275 கிராம் தங்கம், 2 கிலோ 700 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் செலுத்தப்பட்டிருந்தன. இவை உடனடியாக கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
அருணாசலேஸ்வரா் கோயில் வரலாற்றில் உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியை கடந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.