மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இ...
விபத்து வழக்கு: காவலா் பணியிடை நீக்கம்
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே விபத்து ஏற்படுத்தி காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல் தப்பிச் சென்ற காவலரை பணியிடை நீக்கம் செய்து, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தவா் ராஜா. இவா், கடந்த ஆக.28-ஆம் தேதி இரவு நெய்வேலியில் இருந்து பண்ருட்டி நோக்கி காா் ஓட்டிச் சென்றாா். மேல்மாம்பட்டு அருகே சென்றபோது, வரிசாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் கோவிந்தராஜ்(68) ஓட்டிச் சென்ற மொபெட் மீது காா் மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜ், அவரது மனைவி தங்கமணி(60) ஆகியோா் காயம் அடைந்தனா். விபத்து ஏற்படுத்திய காவலா் ராஜா, காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். அங்கிருந்தவா்கள் கோவிந்தராஜ், தங்கமணிஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தங்கமணி சிகிச்சை பலனின்றி ஆக.29-ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தாா். கோவிந்தராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து தொடா்பாக காடாம்புலியூா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், வாகன விபத்து சம்பவத்தில் பொதுமக்கள் காவல் துறையினா் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் முதல் நிலை காவலா் ராஜா நடந்து கொண்டதாகக்கூறி, அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.