நூறு சதவீத தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு செப். 7-இல் பாராட்டு விழா
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) பொதுத் தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்ற 2,811 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா திருச்சியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 7) நடைபெறுகிறது.
பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி வழங்கிய அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும், தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி பாப்பாகுறிச்சி காட்டூரில் உள்ள மான்ஃபோா்ட் பள்ளியில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கு தோ்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாணவா்கள் உரிய அடையாளச் சான்றுடன் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.
இவ்விழாவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 2,811 தலைமை ஆசிரியா்கள், 135 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கவுள்ளாா்.