திண்டிவனம்: "மன்னிப்பு கேட்பது போல என் இடுப்பில் கை வைத்தார்" - திமுக பெண் கவுன்சிலர் புகார்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், பிரபல சாராய வியாபாரியான மரூர் ராஜாவின் மனைவியும், 20-வது வார்டு கவுன்சிலருமான ரம்யாவுக்கும்இடையேயான வாக்குவாதத்தில், ரம்யாவின் காலில் முனியப்பன் விழ வைக்கப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் தமிழ்நாடு அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நகராட்சி ஆணையர் அறையிலிருந்த சிசிடிவியில் பதிவான அந்தக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அதன் தொடர்ச்சியாக முனியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் நகராட்சித் தலைவரின் கணவரும் கவுன்சிலருமான ரவிச்சந்திரன், நகராட்சி அதிகாரிகளான நெடுமாறன், பழனி, திலகவதி, செந்தில்குமார், ஆனந்தன், காமராஜ், பிர்லா செல்வம் உள்ளிட்ட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் முனியப்பன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக டி.எஸ்.பி பிரகாஷிடம் புகாரளித்திருக்கிறார் ரம்யா, அந்தப் புகாரில், "ஆகஸ்ட் 29-ம் தேதி பணி தொடர்பாக திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.
அப்போது கோப்புகளைத் தேடிக் கொண்டிருந்த முனியப்பனிடம், மகா என்பவரை உதவிக்கு வைத்துத் தேடுமாறு கூறினேன். அதற்கு முனியப்பன் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது, `ஏன் ஒருமையில் பேசுகிறீர்கள். மரியாதையாகப் பேசுங்கள்’ என்று முனியப்பனிடம் கூறினேன். அதையடுத்து முனியப்பன் நடந்து கொண்ட விதம் குறித்து எழுத்து மூலமாகப் புகாரளிக்க அன்று மாலை 5 மணிக்கு ஆணையரிடம் சென்றேன்.
அப்போது முனியப்பனையும் அங்கு அழைத்த அதிகாரிகள், முனியப்பன் மீது புகாரளித்தால் அவரது பதவி உயர்வில் பிரச்னை ஏற்படும். அதனால் புகாரளிக்காதீர்கள் என்றனர்.

அப்போது திடீரென முனியப்பன் தானாக என் காலில் விழுவது போல விழுந்தார். அப்போது அவரது இடது கையை என் மீது வைத்து அருவருக்கத்தக்க முறையில் தவறாக நடந்து கொண்டார். நானும், அங்கிருந்தவர்களும் அவரை எழுந்திருக்கும்படி வற்புறுத்தியும் அவர் எழுந்திருக்கவே இல்லை.
அதையடுத்து சுதாரித்துக் கொண்ட நான், நாற்காலியை நகர்த்திக் கொண்டு உட்கார்ந்தேன். என்னிடம் அருவருக்கத்தக்க விதத்தில் தவறாக நடந்து கொண்ட நகராட்சி இளநிலைப் பொறியாளர் முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.