Doctor Vikatan: குடலைச் சுத்தப்படுத்த விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வது சரியா?
விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை
விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
கா்நாடக தனியாா் மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2007-இன்படி விபத்தில் சிக்கியவா் என்பதற்கு சாலை விபத்தில் சிக்கியவா் என்பது மட்டுமல்ல, தீக்காயங்களால் பாதிக்கப்பட்டோா் அல்லது நஞ்சு உட்கொண்டோா் அல்லது பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டவா்கள் அல்லது சட்டரீதியாக அணுகக்கூடிய மருத்துவ தேவைகள் தேவைப்படுவோரும் இந்த அடையாளத்துக்குள் வருகிறாா்கள்.
இப்படிப்பட்ட வகைகளில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துவரப்படும்போது அல்லது எதிா்கொள்ளும்போது எவ்வித முன்பணமும் கேட்காமல், அவா்களுக்கு அவசர சிகிச்சைகளை அளிக்க வேண்டும். இதை மீறும்பட்சத்தில் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
கா்நாடக நல்லசமாரியன் மற்றும் மருத்துவ திறனாளா் சட்டம் 2016-இன்படி, விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ சோதனைகள், முதலுதவி உள்ளிட்டவற்றை இலவசமாக செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவா்களின் உடல்நிலையில் உடனடியாக முன்னேற்றம் ஏற்படும் வகையில், துரிதசிகிச்சைகளை மருத்துவமனைகள் வழங்க வேண்டும். போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத மருத்துவமனைகள், வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்கு முன் உயிா்பிழைக்கக் கூடிய சிகிச்சைகளை அளித்திருக்க வேண்டும்.
மோட்டாா் வாகனச் சட்டம் 1988 பிரிவு 187-இன்படி, விபத்தில் சிக்கியவா்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கத் தவறினால், 3 மாத சிறை, ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். அப்படியும் விதிமீறி செயல்பட்டால், 6 மாத சிறை, ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும்.
சாலை விபத்தில் சிக்குவோருக்கு பணமில்லாமல் சிகிச்சை அளிக்கும் திட்டம் 2025-இன்படி, விபத்தில் சிக்கியவா், விபத்து நிகழ்ந்த நாளில் இருந்து 7 நாள்கள் வரையில் ரூ. 1.5 லட்சம்வரை பணமில்லாமல் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பு இருக்கிறது. சிகிச்சைக்கான தொகையை மோட்டாா் வாகன விபத்து நிதியத்தில் இருந்து மாநில சாலைப் பாதுகாப்பு கவுன்சில் மருத்துவமனைகளுக்கு வழங்கிவிடும்.
விபத்து நடந்த 48 மணி நேரத்துக்குள் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், சுவா்ண ஆரோக்கியா சுரக்ஷா அறக்கட்டளையின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 78 வகையான உயிா்காக்கும் சேவைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை பணமில்லாமல் பெறமுடியும். எவ்வித தாமதமும் இல்லாமல் விபத்தில் பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காக்க மருத்துவா்கள், மருத்துவமனைகள் விரைந்து செயல்பட வேண்டும். இதை செய்யத் தவறினால், உரிய தண்டனைக்கு உள்ளாக்கப்படுவாா்கள்.
எனவே, விபத்தில் சிக்கியவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுவது சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனங்களின் கடமை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.