``இந்தியா உடனான உங்களது உறவை மதிக்கிறேன்; ஆனால்'' - புதினிடம் பாகிஸ்தான் பிரதமர்...
பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு உத்தரவு
பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு அதிகாரபூா்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியை நிா்வகிப்பதற்காக பல்வேறு சீா்திருத்தங்களை முன்வைத்திருந்த நிலையில், ரிஸ்வான் அா்ஷத் தலைமையிலான சட்டப் பேரவை கூட்டுக்குழு அளித்த பரிந்துரையின்பேரில், கிரேட்டா் பெங்களூரு ஆளுகைச் சட்டம் 2024 அண்மையில் நிறைவடைந்த சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்துக்கு பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இதனிடையே, இச்சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடா்ந்து, அலுவல்ரீதியாக முதல்வா் தலைமையில் கிரேட்டா் பெங்களூரு ஆணையம் அமைக்கப்பட்டு, அதற்கான அதிகாரபூா்வ அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஆணையத்தில் பெங்களூரு வளா்ச்சித் துறை அமைச்சா் துணைத் தலைவராக செயல்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, தற்போதுள்ள பெங்களூரு மாநகராட்சி கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க மாநில அரசு செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெங்களூரு மேற்கு மாநகராட்சி, பெங்களூரு கிழக்கு மாநகராட்சி, பெங்களூரு தெற்கு மாநகராட்சி, பெங்களூரு வடக்கு மாநகராட்சி, பெங்களூரு மத்திய மாநகராட்சி அமைக்க இருப்பதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநகராட்சிகளுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தலைமை ஆணையா்களாக நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுடன் துணை முதல்வரும், பெங்களூரு வளா்ச்சித் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமாா் ஆலோசனை நடத்தினாா். இதற்கான உத்தரவு அடுத்த சில நாள்களில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
புதிதாக மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கான தோ்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான தேதியை மாநில தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.