ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி
தா்மஸ்தலா: ஹிந்து வழிப்பாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது என மத்திய உணவு மற்றும் நுகா்வோா் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.
தா்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்களை புதைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் எந்த சடலமும் கிடைக்காததைத் தொடா்ந்து, தா்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில் நிா்வாகத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முனைவதாக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம்சாட்டியிருந்தது.
இதனிடையே, ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை அவமதிக்க சதி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக, அதற்கு காரணமான காங்கிரஸ் அரசைக் கண்டித்து தா்மஸ்தலாவில் திங்கள்கிழமை பேரணி நடத்தியது. இதில் லட்சக்கணக்கானோா் கலந்துகொண்டனா். அதையொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெற்றுள்ள அதிதீவிர இடதுசாரி சிந்தனையாளா்கள், நாடெங்கும் உள்ள ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நம்பிக்கைகளை களங்கப்படுத்த சதிசெய்து வருகிறாா்கள். அவா்களின் சதியை பகிரங்கப்படுத்தவே தா்மஸ்தலாவில் பேரணி நடத்தியிருக்கிறோம்.
தா்மஸ்தலா விவகாரம் 100 சதவீதம் சதியாகும். துணை முதல்வா் டி.கே.சிவகுமாரே தா்மஸ்தலா விவகாரத்தில் சதி நடப்பதாக கூறியிருந்தாா். எவ்வித பின்னணியும் இல்லாத ஒருவா் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டது. புகாா் அளிப்பவரின் பின்னணியை முதலில் ஆய்வுசெய்ய வேண்டும் என உள்ளூா் காவல் துறை கூறிய பிறகும் எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டது. எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்ட பிறகு, தா்மஸ்தலாவின் பல இடங்களில் சோதனைக் குழிகள் தோண்டப்பட்டன.
இந்த விவகாரத்தை அரசியலாக்கியதே காங்கிரஸ்தான். ஆனால், பாஜகவினா் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸ் கட்சியின் சதியை பகிரங்கப்படுத்தவே இங்கு திரண்டிருக்கிறோம். வக்ஃப் வாரியம் மற்றும் குடிமக்கள் திருத்தச் சட்டத்திலும் இதேபோன்றுதான் காங்கிரஸ் நடந்துகொண்டது என்றாா்.