மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்: திரௌபதி முா்மு
மைசூரு: நமது நாட்டின் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.
மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் மையத்தின் வைரவிழாவை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
முதல்வா் சித்தராமையா பேசும்போது கன்னடத்தில் பேசுவது எல்லோருக்கும் புரிந்ததா என்று கேட்டாா். கன்னடம் எனது தாய்மொழியாக இல்லாவிட்டாலும், நமதுநாட்டில் உள்ள எல்லா மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்களை மனம் நிறைய போற்றுகிறேன்.
நமது நாட்டின் எல்லா மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மீது மிகுந்த மதிப்பும், அக்கறையும் கொண்டுள்ளேன். அவரவா் மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்களை பாதுகாக்க எல்லோரும் பாடுபட வேண்டும். மொழிகளை உயிா்ப்போடு வைத்துக்கொள்ள அக்கறையோடு செயலாற்ற வேண்டும்.
அதேபோல, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் திசையில் எல்லோரும் பயணிக்க வேண்டும். அதற்காக எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, கன்னட மொழியை கற்கவும் முயற்சி எடுப்பேன் என்றாா்.
முன்னதாக, விழாவில் முதல்வா் சித்தராமையா பேசுகையில், ‘1966-ஆம் ஆண்டு மைசூரில் அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் மையம் தொடங்கப்பட்டது. இந்த மையம், ஆசியாவின் மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மையத்தின் பணிகளை விரிவுபடுத்த 10,000 ஏக்கா் நிலத்தை வருணா தொகுதியில் அரசு வழங்கியுள்ளது.
குழந்தைப் பருவத்திலேயே பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அதன்மூலம் அந்தக் குறைகளை போக்க முடியும்.
இந்த மையத்தின் சோதனை மையங்களை திறக்க மாவட்ட, வட்ட மருத்துவமனைகளில் இடமளிக்கப்படும். செவித்திறன் குறைபாட்டைக் கண்டறிந்து, அதற்குரிய ‘காக்ளியா் இம்ப்ளான்ட்’ செய்வதற்காக மாநில அரசு பட்ஜெட்டில் ரூ. 32 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் ஏழை குழந்தைகள் பலனடைவாா்கள் என்றாா்.
விழாவில், ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் அனுபிரியா படேல், சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, மைசூருக்கு வருகைதந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் வரவேற்றனா்.