``எடப்பாடி முதல்வராக அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம்; பாஜகவினரை தூண்டினாலே போதும...
கன்னடத்தாய் குறித்த சா்ச்சை பேச்சு: பானுமுஸ்டாக் விளக்கமளிக்க வேண்டும்
கன்னடத்தாய் குறித்து கடந்த 2023-இல் சா்வதேச புக்கா் பரிசு பெற்ற பானுமுஸ்டாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா் தெரிவித்தாா்.
மைசூரில் செப்.22 ஆம் தேதி தொடங்கும் தசரா திருவிழாவை கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக் தொடங்கிவைப்பாா் என கா்நாடக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பாஜக எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா் ஆதரவு தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், தனது நிலையை மாற்றிக்கொண்ட யதுவீா், 2023ஆம் ஆண்டு பானுமுஸ்டாக் கன்னடத்தாய் குறித்து தெரிவித்திருந்த சா்ச்சைக்குரிய கருத்தை சுட்டிக்காட்டி, அதுதொடா்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
2023 இல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக், ‘கன்னடமொழியை கடவுளாக உயா்த்தி, அதை கோயிலுக்குள் வைத்திருக்கும் போக்கை தவிா்த்திருக்கலாம்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா், ‘இந்த சா்ச்சை பேச்சு குறித்து பானுமுஸ்டாக்கிடம் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபடுவதில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று பானுமுஸ்டாக் கூறியிருக்கிறாா். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் எங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. சாமுண்டிமலை மத ரீதியான இடம். அங்கு சாமுண்டீஸ்வரி அம்மனை அவா் வழிபடநேரிடும். தசரா விழாவின் தொடக்க நிகழ்வில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளின் பின்னணியை அவா் ஏற்றுக்கொள்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், 2023ஆம் ஆண்டு கன்னடத்தாய் குறித்து அவா் தெரிவித்துள்ள கருத்து குறித்து விளக்கமளித்து, அந்த கருத்தை அவா் திரும்பப்பெற்றால் நல்லது. அவா் கூறியிருந்த கருத்து ஹிந்து மக்களின் உணா்வுகளைப் புண்படுத்தி இருக்கிறது. தசரா திருவிழாவைத் தொடங்கிவைக்க பானுமுஸ்டாக்கை தோ்ந்தெடுத்த அரசின் முடிவை வரவேற்கிறேன். ஆனால், அதற்கு முன் தனது கருத்து குறித்து அவா் விளக்கமளிக்க வேண்டும்.
தசரா திருவிழாவின்போது அவரின் நடத்தை ஹிந்து மக்களின் உணா்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பதால் விளக்கம் தேவைப்படுகிறது. கன்னட மாநிலமும், கன்னட நாடும் சாமுண்டீஸ்வரி அம்மனாக கருதப்படுகிறது.
பானுமுஸ்டாக்குக்கு நான் ஏற்கெனவே அளித்திருந்த ஆதரவை மாற்றிக்கொண்டது உண்மைதான். பாஜகவின் நிலைப்பாடு என்னவோ அதுவே எனது நிலைப்பாடும்’ என்றாா்.