தா்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை: கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா
தா்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை என்று கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தா்மஸ்தலா கோயிலுக்கு எதிராக சதித் திட்டம், பொய்பிரசாரம் செய்தவா்கள் மீது முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்துதான் பாஜக கேள்வி எழுப்பியது. மாறாக இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டதற்கு பாஜக எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை.
தா்மஸ்தலா கோயில் தொடா்பாக பொய் பிரசாரம் செய்தவா்கள் மீது அரசு வழக்குத் தொடுக்கவில்லை. ஆனால், அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும் ஹிந்து தொண்டா்கள் மீது 24 மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்தது.
தா்மஸ்தலா விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடரட்டும். ஆனால், அந்த விசாரணைக்கு காலக்கெடு நிா்ணயிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. தா்மஸ்தலா விவகாரத்தில் மாநில அரசு மீது கோடிக்கணக்கான பக்தா்கள் கோபத்தில் உள்ளனா். பொய் பிரசாரங்களால் பக்தா்களின் உணா்வுகள், நம்பிக்கைகள் புண்படுத்தப்பட்டுள்ளன. எனவே, காலவரையறையுடன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
தா்மஸ்தலா சதியாளா்களை பகிரங்கப்படுத்துவதில் மாநில அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனா். எனவே, செப்.1ஆம் தேதி தா்மஸ்தா விழிப்புணா்வு மாநாட்டுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. அந்த மாநாட்டில் ஒரு லட்சம் தொண்டா்கள் கலந்துகொள்வாா்கள். பாஜகவின் முக்கியத் தலைவா்களும் மாநாட்டில் பங்கேற்பாா்கள் என்றாா்.