Arundhati roy: ``தேசியவாதிகள் 99% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்'' - அருந்ததி ...
அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!
மடப்புரம் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்குக்கு தொடர்புடைய நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில், அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை தனிப் படை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.
விசாரணையின் போது, ஜூன் 28-ஆம் தேதி தனிப் படை போலீஸாரால் அஜித்குமாா் அடித்துக் கொல்லப்பட்டாா்.
இதனிடையே, அஜித்குமாா் கொலை வழக்கில் தனிப் படை காவலா்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. பல்வேறு தரப்பினரிடம் நேரடியாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவா்மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
சிபிஐ அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ”கோயில் காவலாளி அஜித்குமாா் மீதான திருட்டு வழக்கு விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. திருட்டு வழக்கின் ஆவணங்களை போலீஸாா் சிபிஐக்கு ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஆவணங்களை ஒப்படைத்ததை அடுத்து, திருட்டு புகாரிலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.