மக்கள் பிரச்னைகளைப் பற்றி கேளுங்கள்; விஜய் பற்றி கேட்காதீர்கள்: பிரேமலதா
உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாமோலி மாவட்டம் தேவல் பகுதியிலும் ருத்ரபிரயாக் மாவட்டம் புஷேதர் பகுதியிலும் ஏற்பட்ட மேக வெடிப்பால் அதீத கனமழை பெய்து வருகின்றது. இதனால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்த பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சில குடும்பங்கள் சிக்கியிருப்பதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தியுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாமோலி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தேவல் பகுதியில் இரண்டு குடும்பங்களும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளும் நிலச்சரிவில் புதைந்ததாகவும் அவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ருத்ரபிரயாக்கில் அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், கரையோர மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், உத்தரகண்டில் உள்ள தாராலியில் மேகவெட்ப்பு ஏற்பட்டதால், காணாமல் போன 100 -க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி தொடங்கியது.
உத்தரகாஷி - ஹர்சில் இடையிலான சாலைகள் மீண்டும் இணைக்கப்பட்ட போதிலும், கங்கோத்ரி யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.