உக்ரைன் மீது ரஷிய வான்வழித் தாக்குதலில் 23 பேர் பலி; 48 பேர் காயம்
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 23 போ் பலியாகினர், 48-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கீவ் மற்றும் மேற்கு உக்ரைனின் பல பகுதிகளில் 598 ட்ரோன்கள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவி ரஷியா புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது. கீவின் 10 மண்டலங்களிலும் 33 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு, சுமாா் 100 கட்டடங்கள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 23 பேர் பலியாகினர்; 48-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் நகரத்தையே உலுக்கியது.
இது தவிர கீவ் மையத்தில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் கட்டடம் உள்பட ஏழு மாகாணங்களில் நடத்திய ரஷிய தாக்குதலில் கட்டங்கள் சேதமடைந்தன.
எனினும், இந்தத் தாக்குதலில் தங்களது அலுவலகங்களைச் சோ்ந்த யாரும் காயமடையவில்லை என்று ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் கூறியுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
போர் தொடங்கியதில் இருந்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் விவகாரம் தொடா்பாக நேரடி பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு நடைபெற்றுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது.
இந்த தாக்குதல் ஒரு கொடூரமான மற்றும் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று உக்ரைன் அதிரபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு ராஜதந்திர பணியையும் ஒருபோதும் குறிவைக்கக்கூடாது என்றும், தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பிரஸ்ஸல்ஸில் உள்ள ரஷிய தூதரை ஐரோப்பிய யூனியனும், லண்டனில் உள்ள ரஷிய தூதரை பிரிட்டனும் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய யூனியன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கின்ஷால் ஏவுகணைகள் உள்பட நீண்ட தூரம் பாய்ந்து ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரைனின் ராணுவ தொழில் வளாகத்தில் உள்ள ராணுவ விமான தளங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.