காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. சசிகாந்த் செந்தில்!
இந்தியா, கனடாவுக்கான புதிய உயர் ஆணையராக தினேஷ் கே. பட்நாயக் நியமனம்
இந்தியா-கனடா இடையிலான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இரு நாடுகளின் பிரதமா்களும் ஒப்புக் கொண்ட நிலையில், தற்போது ஸ்பெயினுக்கான தூதராகப் பணியாற்றி வரும் தினேஷ் கே. பட்நாயக்கை, கனடாவிற்கான புதிய உயர் ஆணையராக இந்தியா அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின்படி, 1990-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான பட்நாயக் விரைவில் பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கனடா, இந்தியாவுக்கான தனது புதிய உயர் ஆணையராக மூத்த தூதர் கிறிஸ்டோபர் கூட்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா, நமீபியா, லெசோதோ, மொரீஷியஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்கான உயர் ஆணையராக பணியாற்றிய கூட்டர், வெளிநாட்டு சேவைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான ராஜதந்திர அனுபவம் கொண்டவர். தனது பணியின் தொடக்கத்தில், இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள கனேடிய உயர் ஆணையத்தில் முதல் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
2016 - 2018-க்கு இடையில் இங்கிலாந்திற்கான துணை உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார். ஜனவரி 2022 இல், ஸ்பெயின் மற்றும் அன்டோராவிற்கான தூதராக நியமிக்கப்பட்டார்.
கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறுகையில், புதிய உயர் ஆணையர் நியமனம், இந்தியாவுடனான ராஜதந்திர ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் இந்தியா-கனடா இடையிலான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்குமான கனடாவின் படிப்படியான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். இது கனடாவின் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கு இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் அதே வேளையில், கனடாவிற்கான சேவைகளை மீட்டெடுப்பதில் இந்த நியமனம் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியா மீதான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தொடர்ச்சியான விரோதப் போக்கு காரணமாக, கனடாவுக்கான தனது உயர் ஆணையரை இந்தியா தில்லி திரும்பப் பெற்று 10 மாதங்களுக்குப் பிறகு, புதிய உயர் ஆணையராக பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் கடந்த 2023-ஆம் ஆண்டில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடா்பிருப்பதாக அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றஞ்சாட்டினாா். நிஜ்ஜாா் கொலையில் விசாரிக்கப்பட வேண்டிய நபராக, கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் வா்மா அறிவிக்கப்பட்ட நிலையில், அவா் உள்பட 6 தூதரக உயரதிகாரிகளை அக்டோபர் 2024 இல் திரும்பப் பெற்ற இந்தியா, கனடா தூதா் உள்ளிட்ட உயரதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. இதனால், இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
இந்தச் சூழலில், ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமாவைத் தொடா்ந்து, பொருளாதார வல்லுநரான மாா்க் காா்னி கனடா பிரதமராக கடந்த மாா்ச் மாதம் பதவியேற்றாா்.
இந்நிலையில், கனடாவில் ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, மாநாட்டுக்குப் பிறகு மாா்க் காா்னியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, தூதா்களை மீண்டும் நியமிப்பதில் தொடங்கி, இருதரப்பு உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு நாடுகள் தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், கனடாவுக்கான புதிய இந்திய தூதரை நியமிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வந்த மத்திய அரசு, தற்போது ஸ்பெயினுக்கான தூதராகப் பணியாற்றி வரும் தினேஷ் கே. பட்நாயக்கை, கனடாவிற்கான புதிய உயர் ஆணையராக நியமித்துள்ளது.