``ரஷ்ய எண்ணெய் கொள்முதல்; இந்தியாவை விட சீனாவே அதிகம்'' - டிரம்புக்கு ஜனநாயகக் கட்சி கண்டனம்
ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதுதான் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு முக்கிய காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது 50 சதவீத சுங்கவரி விதித்துள்ளார்.
இது இந்தியா - அமெரிக்கா உறவுகளைப் பாதிக்கக் கூடும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
``ரஷ்ய எரிபொருளை அதிகம் வாங்கும் சீனாவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்தியா மீது மட்டும் கவனம் செலுத்துவது கண்டிக்கத்தக்கது.
இந்தியா மீதான நடவடிக்கை உக்ரைன் தொடர்பான விவகாரம் அல்ல என்பதையே இது காட்டுகிறது" எனக் குறிப்பிட்டு, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின் இணைப்பையும் பகிர்ந்துள்ளனர்.

அந்தக் கட்டுரையில்,
``ரஷ்ய எரிபொருளை வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தால் அது வேறு விஷயம்.
ஆனால் ரஷ்ய எரிசக்தியின் மிகப்பெரிய இறக்குமதியாளரான சீனாவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்தியா மீது மட்டும் கவனம் செலுத்துவது குழப்பமான ஒரு முடிவாகும்.
தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் சீனா இதுவரை அமெரிக்காவின் விமர்சனத்திலிருந்து தப்பித்திருக்கிறது.'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ``உக்ரைன் போர் என்பது மோடியின் போர்'' என வெளிப்படையாக விமர்சித்தது கவனிக்கத்தக்கது.