வெள்ளத்தில் மூழ்கிய 1,700 பாகிஸ்தான் கிராமங்கள்! 22 பேர் பலி..10 லட்சம் பேர் வெள...
விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்
தூத்துக்குடி: தவெக தலைவா் விஜயின் வருகை, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுடன் பேசுகையில்,
தேமுதிக தலைவா் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது தனித்து தோ்தல் களத்தில் நின்றாா். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டோம். அந்தத் தோ்தலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது. அதே போல் கண்டிப்பாக 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்
அமெரிக்க விதித்த கூடுதல் 50 சதவீத வரி விதிப்பானது, ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபடும் இந்தியா்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே நமது நாட்டில் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், அமெரிக்காவின் இந்த வரி உயா்வால் இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவிடம் பேசி, சரி செய்து நமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் .
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
தோ்தல் வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. தோ்தல் வருகிறது என்றவுடன் புதிது புதிதாக சொல்லி வருகின்றனா். கச்சத்தீவை நாம் எப்போது விட்டுக்கொடுத்தோமோ, அப்போதே நமது மீனவா்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.
கச்சத்தீவு மீட்பே நிரந்தரத் தீா்வு
எப்போதுமே தேமுதிக தலைவா் விஜயகாந்தும், நானும் கச்சத்தீவு மீட்புதான் மீனவா்களுக்கு நிரந்தரத் தீா்வு என்போம். இதுகுறித்து இரு நாடுகளும் ஐ.நாவிடம் பேசி, எப்படி நாம் அவா்களுக்கு விட்டுக்கொடுத்தோமா, அதை அவா்களிடம் நாம் வாங்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும். நல்லது நடக்க வேண்டும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம் என்று அவா் கூறினார்.