வெள்ளத்தில் மூழ்கிய 1,700 பாகிஸ்தான் கிராமங்கள்! 22 பேர் பலி..10 லட்சம் பேர் வெள...
ஜம்முவில் ரயில் சேவைகள் மூன்றாவது நாளாக நிறுத்தம்
ஜம்முவில் ரயில் போக்குவரத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் இன்று ஜம்முவுக்குச் சென்று வரும் 40 திட்டமிடப்பட்ட ரயில்கள் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். மழையில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்காக இயக்கப்படும் இரண்டு சிறப்பு ரயில்களைத் தவிர, ஜம்மு ரயில் நிலையத்தில் இருந்து எந்தவொரு ரயிலும் இயக்கப்படவில்லை.
கடந்த திங்கள்கிழமை முதல் ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரியாஸி, ரஜெளரி, ரம்பன், கிஷ்த்வாா், பூஞ்ச் மாவட்டங்களில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
தோடா மாவட்டத்தில் மழை பாதிப்பால் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். அதேபோல், வைஷ்ணவ தேவி கோயிலுக்கு யாத்திரை செல்லும் வழியில் பலத்த மழை காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிலச்சரிவில் சிக்கி 34 போ் உயிரிழந்தது உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், பலத்த மழையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. குடிநீா், மின்சாரம் மற்றும் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் வசித்த 10,000-க்கும் மேற்பட்டோா் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ராணுவத்துடன் இணைந்து தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
திடீர் வெள்ளம் மற்றும் மண் அரிப்பைத் தொடர்ந்து கதுவா-மாதோபூர் பஞ்சாப் மார்க்கத்தில் செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு பிரிவில் பல இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் அங்கு நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில நாள்களுக்கு ரயில் போக்குவரத்து இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக, வடக்கு ரயில்வே ஜம்முவில் இருந்து செல்லக்கூடிய மற்றும் வரவேண்டிய 40 திட்டமிடப்பட்ட ரயில்கள் சேவையை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களில், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களிலிருந்து ஜம்முவுக்கு வரவிருந்த 24 ரயில்கள் மற்றும் ஜம்மு, கத்ரா மற்றும் உதம்பூர் நிலையங்களிலிருந்து புறப்படவிருந்த 16 ரயில்களும் அடங்கும்.
மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவுவதற்காக, ஜம்மு ரயில்வே பிரிவு, ரயில்வே காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, வியாழக்கிழமை இரண்டு சிறப்பு ரயில்களை இயக்கி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அழைத்துச் சென்றது.
மேலும், ஜம்மு, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, பதான்கோட் கான்ட் மற்றும் பதான்கோட் நகரம் போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரையும் ரயில்வே தரப்பில் வழங்கப்பட்டது.